Tuesday 30 November 2010

Vijay's Political Entry !

நடிகர் விஜய் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் திங்கள்கிழமை திடீரென ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.கடந்த வருடம் அரசியல் பிரவேசம் குறித்து தன் கருத்தை வெளியிட்ட நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸில் இணைய ராகுல் கோரிக்கை வைத்ததாகவும், அப்படி இணைந்தால் இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவி தர வேண்டும் என விஜய் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ""இப்போது அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து யோசிக்கவில்லை, பிற்காலத்தில் முடிவெடுக்கப்படும்'' என பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்போது அறிவித்தார் விஜய்.இதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து கருத்துகளைக் கேட்டு வந்தார். மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் எனப் பேசினார். கடந்த சில வாரங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ரசிகர்மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அரசியல் குறித்துப் பேசினார். அப்போது பேசிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தத் தேர்தலை அரசியல் இயக்கமாக சந்திக்க வேண்டும், அரசியலுக்கு வர இது தகுந்த நேரம், பொங்கல் பண்டிகைக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள ஜே.எஸ். திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த மாவட்ட, நகர, ஒன்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் மனம் திறந்து பேசியதாகவும், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment